நீரினால் ஏன் பாதிப்பு ஏற்படுகிறது? நீர் பற்றாக்குறை ஏன் ஏற்படுகிறது?

New

நீரினால் பாதிப்புகள் புயல், மழை, வெள்ளம் ஏன் வருகிறது! இந்த பாதிப்பு ஏன் வருகிறது என்ற கேள்வி நமக்கு இருக்கிறது. இவை பாதிப்பு இல்லை. நீர் தன் கணக்கை சரிசெய்கிறது. கணக்கு பரிவர்த்தனை (Account Settlement) என்று சொல்லலாம். நீரினால் ஏற்படும் பாதிப்பு மட்டுமல்ல, உதாரணத்திற்கு நாம் கீழே விழுந்து முட்டியில் அடிபட்டு இரத்தம் வருகிறது. வீட்டில் ஒரு இறப்பு நடக்கிறது. அதை நாம் பாதிப்பு என்று நினைக்கிறோம். ஆனால் அதுவும் கணக்கு நேர்படுத்துதல் தான்.

இரட்டைத்தன்மை(Duality) என்று சொல்வார்கள். நாம் ஒரு தொழில் செய்கிறோம். அதில் லாபம் வரவேண்டும் என்று நினைக்கிறோம். லாபம் பெற வேண்டும் என்று நினைத்தாலே நஷ்டமும் சேர்ந்து வந்துவிடும். இப்பொழுது இல்லை என்றாலும் ஒரு நாள் வரும். ஒரு சாலையில் செல்கிறோம். மேட்டில் ஏறிவிட்டோம் , இப்பொழுது இறங்குகிறோம். இறங்குவது பிடிக்கவில்லை என்றால் ஏறவே கூடாது. சாகவே கூடாது என்றால் பிறக்கவே கூடாது. பிறந்து விட்டால் இறப்பு உறுதி. ஏறிவிட்டால் இறக்கம் ஒரு நாள் வரும். ஆக்கம் என்ற ஒன்று இருந்தால் அழிவு என்ற ஒன்று இருந்தே தீரும். இது போல் எல்லாம் இரண்டு துருவங்களாக இருக்கிறது. வெளிச்சம் என்ற ஒன்று வந்தால் இருட்டு என்ற ஒன்று வந்தே தீரும். சப்தம் - நிசப்தம். வெற்றி - தோல்வி. இவைகளை பிரிக்க முடியாது. நாம் ஒன்றை மட்டும் பிடித்து கொண்டு இன்னொன்று வேண்டாம் என்று நினைக்கிறோம். ஆனால் ஒன்றை பிடித்தால் மற்றொன்றும் சேர்ந்தே வரும்.

விளையாட்டில் 2 அணி இருக்கிறது. வெற்றியை நோக்கி ஒரு அணி நகரும் போது மற்றொரு அணி தோல்வியை நோக்கி நகர்கிறது. நிலம் தன்னை தானே சரி செய்வதை தான் நில நடுக்கம் என்று சொல்கிறோம். நீருக்கு நாம் முன்பு கொடுத்த சில பாதிப்புகள் ஒரு அலையாக சென்று அடித்து அடித்து ஒரு சுற்று சுற்றி பிறகு நமக்கே வந்திருக்கிறது.

இரட்டை தன்மையில் நாம் செய்த ஒரு வினை அதனுடைய விளைவாக இன்னொன்றை நடத்தும் , நாம் செய்த அந்த ஒன்றினால் தான் இந்த இன்னொன்று நடக்கிறது என்று நாம் தொடர்புபடுத்தி கொள்ள முடியும். இப்போது நாம் ஒன்று செய்கிறோம் அதன் விளைவு வருவதற்கு 50 வருடமோ 150 வருடமோ அல்லது 1000 வருடமோ கூட ஆகலாம் அதனால் தான் அது நடக்கும் போது ஏன் அது நடக்கிறது என நாம் தொடர்புபடுத்தி பார்க்க முடியவில்லை.

இப்பொழுது நமக்கு வயிறு வலிக்கிறது , நாம் நேற்று சாப்பிட்ட உணவு சரியில்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இப்போது நமக்கு ஒரு நோய் வந்திருக்கிறது. ஒரு வருடங்களுக்கு முன்பு நாம் செய்த தவறு தான் அதற்கு காரணம் என்றால் நமக்கு அது நியாபகம் இருக்காது. ஆனால் ஏன் வந்தது என்று நாம் இப்போது கேட்க வேண்டாம். ஏனென்றால் நாம் இதன் விதையை போட்டு 35 வருடம் இருக்கும். இதை தான் இந்து சமயத்தில் கர்மா என்றும் கிறிஸ்தவ சமயத்தில் பாவம் என்றும் சொல்வார்கள். சுருக்கமாக நமது மொழியில் சொல்ல வேண்டும் என்றால் கணக்கு நேர் படுத்துதல்(Account Settlement) எனலாம்.

அதனால் தான் கீதையில் சொல்லப்பட்டு இருக்கிறது “எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது, எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்”. உங்களுக்கு அது பிரச்சினையாக தெரிகிறது. அது பிரச்சினை இல்லை. அதனுடைய கணக்கை அது சரி செய்து கொள்கிறது, நாம் செய்த கர்ம வினையை இன்றுடன் முடித்து கொள்ள அது நமக்கு உதவுகிறது. இப்பொழுது நடக்கா விட்டால் அது இன்னும் பெரிய பிரச்சினையாக முடியும். இன்று ஒரு 50 உயிருக்கு பாதிப்பு என்றால், அது நடக்கா விட்டால் இன்னும் ஒரு 5000 உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்த கூடிய அளவில் அது வரக்கூடும்.

நாம் நமக்கு வருவதை அப்படியே மகிவுடன் ஏற்று கொள்வது நல்லது.